இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் தினமும் 13 மணி நேரம் வரையில் அங்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா பல்வேறு உதவிகளை செய்துள்ள நிலையில் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் உதவியை இலங்கை அரசு நாடி நிற்கின்றது.
இந்நிலையில் கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகை முன்பு 5 ஆயிரம் பேர் திரண்டனர். அவர் பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் அவசர நிலை பிரகடனத்தை அதிபர் அறிவித்தார். அவசர நிலை அறிவிக்கப்பட்டதன் மூலமாக நாட்டில் அமைதியை ஏற்படுத்த ராணுவத்திற்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக அவசர நிலை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக கோரி போராட்டம் வெடித்துள்ள நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை தவிர மற்ற அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் அளித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அதிபர் கோட்டபய ராஜபக்சே செயலாளரிடம் பதவி விலகல் குறித்து கூறி விட்டதாக கூறப்படுகிறது.