மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே சுண்டபற்றிவிளை பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மேலராமன்புதூர் அருகே சதீஷ் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் சதீஷின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சதீஷ்க்கும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சதீஷ்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு முதியவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து கோட்டார் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.