தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை இணைந்து பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எஸ். மேட்டுப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்த விமலா ஓய்வு பெற்றுள்ளார். அதன்பிறகு கிராம ஊராட்சி தூய்மை பணியாளர்கள் பள்ளியை சுத்தம் செய்து வந்தனர். ஆனால் கடந்த 2 நாட்களாக கிராம தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்யாததால் பள்ளி வளாகம் முழுவதும் குப்பையாக கிடைக்கிறது. மேலும் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்து குப்பைகளை வெளியில் கொட்டினால்தான் அகற்றுவோம் என ஊராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகவேல் மற்றும் ஆசிரியை செல்வி ஆகியோர் இணைந்து பள்ளி வளாகத்தில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய பணியாளர்களை நியமனம் செய்ய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை இணைந்து தூய்மை பணியில் ஈடுபடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.