வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பி.எட் பட்டதாரி மீரா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆசிரியர் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் மதுரவாயலை சேர்ந்த சுந்தரகுமார், அவரது மனைவி பிரியா, ராணிப்பேட்டையை சேர்ந்த சுகுமாரன் ஆகிய மூன்று பேரும் இணைந்து மீராவிடம் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதற்காக கடந்த 2019-ஆம் ஆண்டு கோயம்பேட்டில் இருக்கும் ஒரு ஹோட்டலில் வைத்து 3 பேரும் 10 லட்ச ரூபாயை பெற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வேலை வாங்கி தராமல் மூன்று பேரும் ஏமாற்றி வந்துள்ளனர். மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மீரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுந்தரகுமார் மற்றும் பிரியா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சுகுமாரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.