பல வருடங்களாக வெறும் பேச்சிலும், அறிவிப்பிலும் இருந்த மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக கோவையில் முதன் முறையாக அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்றுள்ள ஆலோசனை கூட்டம் பொதுமக்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நம்நாட்டின் 19, 2ஆம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டமானது செயல்படுத்தப்படும் என்று 2011-ல் மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்தது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டில் கோவை மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் அதே பட்டியலில் இடம்பெற்றிருந்த கேரளாவின் கொச்சியில் 3 வருடங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் ஓடத்துவங்கி விட்டது. சென்ற 6ஆம் தேதி புனேயில் மெட்ரோ ரயில் திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும் பல நகரங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட்டுவிட்டது.
சில நகரங்களில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்துக்கு கோவை தேர்வு செய்யப்பட்ட 2011-ல் இருந்து, 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிக்கவில்லை. அவற்றிற்கும் ஜெர்மன் வங்கியிடம் நிதியுதவி பெறப்பட்டு “சிஸ்ட்ரா” மற்றும் “ரைட்ஸ்” நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உக்கடம் – கணியூர் (26 கி.மீ), உக்கடம்- காரமடை, பிளிச்சி (24 கி.மீ), தடாகம் ரோடு, தண்ணீர் பந்தல்-திருச்சி ரோடு, காரணம்பேட்டை (42 கி.மீ), சிறுவாணி ரோடு, காருண்யா நகர்- அன்னுார், கணேசபுரம் (44 கி.மீ), மற்றும் உக்கடம் -வெள்ளலுார் (8 கி.மீ) என்று 144 கி.மீ., துாரத்துக்கு நிலவியல் சர்வே மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோடுகளில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது.
கணபதி, சிங்காநல்லுார், சுந்தராபுரம், எல் அண்ட் டி பை பாஸ் சுங்கம் சந்திப்பு உட்பட பல்வேறு இடங்களில் புதிதாக மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. பாலங்கள் உள்ள சாலைகளில் மெட்ரோ ரயில் வழித்தடம் ஏற்ப்பட வாய்ப்பு இருக்காது என்று மெட்ரோ ரயில் கோரிக்கையை, தொழில் அமைப்பினர் கைவிட்டு இருந்தனர். இருப்பினும் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறிய நிதியமைச்சர் தியாகராஜன் “கோவை மெட்ரோரயிலுக்கு விரிவான திட்டஅறிக்கை தயாராகி விட்டது. அவை மக்கள் கருத்துக் கேட்புக்கு வைக்கப்பட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் வாயிலாக நிதிபெறுவதற்கு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
அதனை தொடர்ந்து இத்திட்டம் தொடர்பாக அதிகாரிகளின் முக்கியமான ஆலோசனை கூட்டம் முதன் முறையாக கோவையில் நடைப்பெற்றுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் 139 கி.மீ துாரத்துக்கு கோவை மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இருப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 44 கி.மீ துாரத்துக்கு இந்த திட்டத்தின் பணிகளை மேற்கொள்ளவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது பற்றி அதிகாரிகள் கூறியதாவது “விரிவான திட்ட அறிக்கை மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு ஆட்சேபங்கள், ஆலோசனை பெறப்பட்டதும் திருத்தங்கள் செய்யப்படும். பின் திட்டத்துக்கான நிதியைப் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்” என்று கூறினர். இதுநாள் வரையிலும் கனவாக இருந்த கோவை மெட்ரோ ரயில் திட்டம் இனிமேல் நனவாகுமென்ற நம்பிக்கை பிறந்துள்ளது.