Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“10 மாணவிகளுக்கு திருமணம்” புத்தகத்தை ஏந்த வேண்டிய கையில் குழந்தைகள்…. அதிர்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர்….!!!

பள்ளியைவிட்டு இடைநின்ற 10 மாணவிகளுக்கு திருமணம்  நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 66 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றுள்ளனர். இந்த பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். அப்போது இடைநின்ற மாணவர்களின் விவரம் குறித்து கேட்டறிந்தார். அதன்பிறகு மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் விதமாக மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் 7 மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக பெற்றோர்கள் உறுதி அளித்துள்ளனர். இதில் சில மாணவர்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்கின்றனர்.

இதனையடுத்து அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு செய்தார். அப்போது 10 மாணவிகள் பள்ளியை விட்டு இடைநின்றது தெரியவந்தது. இதனையடுத்து முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி மாணவிகளின் இருப்பிடத்திற்கு சென்று விசாரித்தார். அப்போது 10 மாணவிகளுக்கும் திருமணம் நடந்து குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த முதன்மை கல்வி அலுவலர் மாணவிகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதாவது பெண் பிள்ளைகளுக்கு கல்வி மிக அவசியமானது. மேலும் திருமண வயதை எட்டாமல் மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் கூறினார். இந்த ஆய்வின் போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நெடுஞ்செழியன், பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்ட பல அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Categories

Tech |