ஆத்தூர் அருகில் அம்பேத்கார் சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் ராமநாயக்கன் பாளையம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு பீடம் இருந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்தப் பகுதியை சேர்ந்த 25 பேர் அம்பேத்கர் சிலையை ஒரு துணியில் சுற்றி அந்த பீடத்தில் நிறுவி சிலையை திறக்க முயற்சி செய்துள்ளனர். இத்தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு அனுமதி இல்லாமல் இங்கு சிலை வைக்க கூடாது என்று தெரிவித்தார்கள்.
உடனே அப்பகுதியில் உள்ள மக்கள் சிலையை சுற்றி அமர்ந்து சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். உடனே இந்த சம்பவ இடத்திற்கு போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீ அபினவ், தாசில்தார் மாணிக்கம், வருவாய் துறை அதிகாரிகள் அனைவரும் வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்களும் அந்த இடத்திற்கு வந்து திரண்டதால் பதற்றமும் பரபரப்பும் அதிகமாக இருந்தது.
இந்நிலையில் பொதுமக்களிடம் அதிகாரிகள் பேசியதாவது, சிலையை அரசு அனுமதி பெற்ற பிறகு தான் திறக்க வேண்டும். அதுவரை சிலையை திறக்க கூடாது. மேலும் சிலையை சுற்றி வேலி அமைத்து சிசிடிவி பொருத்தி கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். இதனை எற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.