விவசாயிகள் அளவுக்கு அதிகமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி மலை காய்கறிகளை சாகுபடி செய்து வரும் நிலையில் நீலகிரியில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர் தனது 78 வயதிலும் தனியாக இயற்கை விவசாயம் செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார். மலையின் ரம்யத்தில் கம்பீரமாக காட்சியளிக்கும் அழகிய நகரம் நீலகிரி. மேகங்கள் தவழும் இந்த நிலத்தில் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் மண்ணிற்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் ஆரோக்கியமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக சில விவசாயிகள் ரசாயனம் பயன்படுத்தி விவசாயம் செய்வதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு மாற்றாகவும் ஆரோக்கியமான காய், கனிகளை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் கே.டி.பாலாடா பகுதியை சேர்ந்த மேகராஜ் என்ற 78 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தை செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதுகுறித்து மேகராஜ் கூறுகையில், “இயற்கை விவசாயம் மக்களுடைய உடல் நலத்திற்கு நல்லது என்ற எண்ணத்தோடு நண்பனின் துணையுடன் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். முதலில் 20 சென்ட் நிலத்தில் ஸ்ட்ராபெரி பயிரிட்டேன். அதில் எந்த விதமான செலவும், பூச்சி மருந்தும் பயன்படுத்தாமல் நல்ல வருமானம் கிடைத்தது. எனவே மற்ற காய்கறிகளையும் விளைவிக்கலாம் என்று அடுத்ததாக 20 சென்ட் நிலத்தில் நீலகிரிக்கு விற்பனை செய்யக்கூடிய அனைத்து விதமான காய்கறிகளையும் பயிர் செய்ய ஆரம்பித்துள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.
தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் பசுமை குடில் அமைத்தும், திறந்த வெளியிலும் கேரட், பீட்ரூட், முள்ளங்கி, பட்டாணி உள்ளிட்ட மலை காய்கறிகள், ஸ்டிராபெர்ரி, திராட்சை மற்றும் கீரை வகைகளை பயிரிட்டும் அசத்தி வருகிறார் மேகராஜ். முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் இவரது விவசாயத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதால் அதிக வருமானமும் கிடைக்கிறது. இயற்கை விவசாயத்திற்கு பதிலாக ரசாயனங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யுமாறு பலர் அறிவுறுத்தியும் அதனை பொருட்படுத்தாத மேகராஜுவின் இயற்கை விவசாயத்தால் மாதந்தோறும் 15 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாகவும் செலவுகள் போக ஆண்டிற்கு இரண்டு லட்சம் வரை லாபம் பெற்று வருகிறார்.
ரசாயனங்களை பயன்படுத்துவதால் மண் வளம் கடுமையாக பாதிக்கப்பட்டு நீர்நிலைகள் மாசடைந்து எதிர்காலமும் கேள்விக் குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை உணர்ந்து ஆசிரியர் மேகராஜை போல மற்ற விவசாயிகளும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்பது தற்போதைய தேவையாக இருக்கிறது. மண் வளத்தைப் பாதுகாத்து மனிதர்களின் உடல் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த ஆண்டு முதல் நீலகிரி மாவட்டமானது இயற்கை வேளாண் மாவட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளாகவே தனது ஓய்வு பெற்ற வயதிலும் மேகராஜ் இயற்கை வேளாண் சாகுபடியில் ஈடுபட்டு வருவது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.