இயற்கை முறையில் வேளாண்மை செய்யும் போது நஞ்சற்ற வேளாண் முறையை அடுத்த தலைமுறைக்கு தருவதோடு, ஆரோக்கியமான உணவையும் நாம் பெற முடியும். விவசாயத்தை இயற்கை முறையில் மேற்கொள்வது எப்படி ? என்பது பற்றி பார்ப்போம்.
* இயற்கை வேளாண்மையின் முதற்படி அனைத்து விதமான பயிர்களையும் விளைவிப்பதற்கு ஏற்ப நிலத்தை தயார் செய்வது.
* விளைநிலங்களில் ஒரே மாதிரியான பயிர்களை ஆண்டு முழுவதும் சாகுபடி செய்வதை தவிர்த்து, பயிர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்து சாகுபடி செய்தால் மகசூல் கூடுதலாக கிடைக்கும்.
* இயற்கை வேளாண்மையில் பயிர் மகசூல் ஊடுபயிர் மற்றும் கலப்பு சாகுபடி செய்வதன் மூலமும் அதிகரிக்கின்றது.
* இயற்கை பூச்சி விரட்டிகளை இயற்கை வேளாண்மையில் பயன்படுத்துவதன் மூலம் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிலும் ரசாயன கலப்பின்றி ஆரோக்கியமான உணவுகளை பெற முடியும்.
* இயற்கை வேளாண்மையில் மூடாக்கி போடுதல் முக்கிய அங்கமாக உள்ளது. விளைச்சலை அதிகப்படுத்துதல் இதன் முக்கிய நோக்கமாகும். பயிர்களுக்கு இடையே கரும்பு தோகை, இலை தழை, வைக்கோல் ஆகியவற்றை கொண்டு மூடி விடுகிறார்கள். இதன் மூலம் வேர் பகுதிகளில் ஈரப்பதம் காணப்படுவதோடு மண்புழுக்கள் வளர ஏதுவான ஒன்றாக இருக்கும்.
* இயற்கை உரங்களே இயற்கை விவசாயம் முற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. தொழு உரம், சாண எரு உரம், மண்புழு உரம், பசுந்தழை உரம், பசுந்தாள் உரம் ஆகியவற்றை பயன்படுத்தலாம். அதேபோல் பயிர்கள் செழித்து வளர தேங்காய் பால் மோர், குணப் பசலம், பஞ்சகவ்யம், அமிர்த கரைசல் உள்ளிட்ட இயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்த வேண்டும்.
* இயற்கை முறையில் தயாரிக்கப்படும் கலப்பு உரம் பயிர்களின் வளர்ச்சி, நல்ல மகசூல் பெற ஊட்டசத்தாக பயன்படுத்தப்படுகிறது. ஆட்டுப்புழுக்கை, நாட்டு மாட்டின் சாணம், எரு மற்றும் இலை தழைகள் இந்த கலப்பு உரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
* ஒவ்வொரு தாவரத்திற்கும் உயிர் நாடியாக விளங்கும் விதைகளை தேர்வு செய்யும்போது நல்ல தரமான நாட்டு விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். இயற்கை முறையில் வேளாண்மை செய்வதன் மூலம் தரமான பொருள்களை அதிக விளைச்சளுடன் அனைவருக்கும் வழங்க முடியும்.
* இயற்கை சூழல் மாசுபடாமல் காத்தல், மாசற்ற நீரைத் தக்க வைத்தல், மண்ணின் மலட்டுத் தன்மையை நீக்கி பொன் விளையும் பூமியாக மாற்றுதல், உணவு நஞ்சாதலை தடுத்து உயிரினங்களைப் பாதுகாத்தல், உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கெடு ஏற்படாமல் தடுத்து இயற்கை உரங்கள் மூலம் சாகுபடி செய்தல் ஆகியவை இயற்கை வேளாண்மை செய்தல் முறையாகும்.