தகவல் தொழில் நுட்பத்திற்கு தேவையான அனைத்து பொருள்களை தாங்களாகவே கொள்முதல் செய்யும் வகையில் மின்னணு கொள்முதல் இணையதளத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று அறிமுகம் செய்துள்ளார். சென்னை நந்தனத்தில் இருக்கும் எல்காட் நிறுவனம் தமிழக அரசு துறைகளுக்கு தேவையான அனைத்து மின் பொருட்களை கொள்முதல் செய்து வழங்குகின்றது. இந்த நிறுவனத்தின் சேவைகளை மேம்படுத்துவதற்காகவும், உரிய நேரத்தில் சேவைகளை கொண்டு சேர்க்கவும் அரசுத்துறைகள் தாங்களாகவே கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் மின்னணு கொல்முதல் இணையதளங்களை உருவாக்கி உள்ளது.
இதனை தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது: “மின்னணு கொள்முதல் இணையதளத்தால் எல்காட் நிறுவனம் வாயிலாக பயன்பெறும் நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இடையேயான தொடர்புகள் மேம்படும். சந்தை விலையிலேயே இந்த இணையதளம் வாயிலாக நீங்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இதுவரை கொள்முதல் சேவைகள் மற்றும் நேரடியாக வழங்கப்பட்டது. இதனால் விலைப்பட்டியல் மற்றும் கொள்முதல் ஆணைகள் வழங்க ஒரு மாதம் வரை கால அவகாசம் தேவைப்பட்டது. தற்போது அது மாதிரி இல்லாமல் உடனடியாக கொள்முதல் மேற்கொள்ள முடியும்” என்றும் அவர் தெரிவித்தார்.