சேலத்தில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை தியாகி நடேசன் தெருவில் வசித்து வருபவர்கள் 48 வயதான ரமேஷ், 28 வயதான நந்தகுமார், 30 வயதான சீனிவாசன். இவர்கள் 3 பேரும் கூலித்தொழில் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் இவர்கள் சாப்பிட்டு விட்டு வீட்டில் முன் அமர்ந்து குடும்பத்துடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென நந்தகுமாரின் வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதை அடுத்து சிறிது நேரத்திற்குள் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த நெருப்பு ரமேஷ் மற்றும் சீனிவாசன் வீட்டிற்கும் பரவத் தொடங்கியது
இது குறித்து சேலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் மூன்று பேரின் வீட்டில் இருந்த உணவு பொருட்கள், அரிசி, துணிமணிகள் எல்லாம் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்தது.