பணத்தை திருப்பி தர மறுத்த பெண்ணை கள்ளகாதலன் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் பைரவா காலனியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காமாட்சிக்கும், லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான ஜெயபிரகாஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இதில் ஜெயபிரகாஷுக்கு ஏற்கனவே திருமணமாகி அம்மு என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் காமாட்சியிடம் 2 லட்ச ரூபாய் கொடுத்து வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக காமாட்சி ஜெயப்பிரகாஷூடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஜெயபிரகாஷ் தனது மனைவியுடன் காமாட்சியின் வீட்டிற்கு சென்று பணம் குறித்து கேட்டபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஜெயபிரகாஷ் காமாட்சியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து காமாட்சி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயபிரகாஷ் மற்றும் அம்மு ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.