கடந்த சில ஆண்டுகளாகவே அரசு ஊழியர்கள் சார்பாக ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின், அவர்களுக்கு ஓய்வூதியம் வரும்படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது. தமிழக அரசுக்கு இருந்த நிதி பற்றாகுறையின் காரணமாக பழைய ஓய்வூதிய முறை ரத்து செய்யப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் சென்ற 2003ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் புதிய ஓய்வூதிய திட்டமானது ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டத்துக்கு அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஊழியர்கள் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களது அமைச்சரவையில் தமிழக அரசு அண்மையில் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ்.சிவசங்கர் தற்போது போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏப்ரல் 6 முதல் மே 10-ஆம் தேதி வரை தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ளது. இந்நிலையில் எஸ்.எஸ்.சிவசங்கர் அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதை உடனடி செயல்திட்டமாக மாற்றினால் அது அவருக்கு இனிவரும் காலத்தில் ஒரு முக்கிய புள்ளியாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.