சர்வதேச சந்தையில் ஏற்படும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடந்த 10 நாட்களில் 9-வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் முதன் முறையாக கொடைக்கானலில் இன்று (மார்ச் 31) டீசல் விலை ரூபாய் 100-ஐ தாண்டி உள்ளது. இன்று டீசல் விலை 76 காசு உயர்ந்த நிலையில், கொடைக்கானலில் ஒரு லிட்டர் விலை ரூபாய் 100.01-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பெட்ரோல் விலையும் லிட்டருக்கு ரூபாய் 110.32 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.