புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான ஒரு குழு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் ரிஷிவந்தியம் பகுதியை சேர்ந்த கண்ணதாசன் என்பது தெரியவந்தது. அவர் மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்வதாக கூறியுள்ளனர். இருப்பினும் அவருடைய நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அப்போது அதில் தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் இருந்தது. இதை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர்ந்து கண்ணதாசனிடம் விசாரணை நடத்தினர். அவர் கோபால் என்பவர் தனக்கு புகையிலைப் பொருட்களை கொடுத்ததாகக் கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் மணலூர்பேட்டை பகுதியில் இருக்கும் கோபாலின் மளிகை கடைக்கு சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லாததால் கடையை கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். மேலும் கண்ணதாசனை கைது செய்த காவல்துறையினர் கோபாலை வலைவீசி தேடி வருகின்றனர்.