ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸ் ரோடு பகுதியில் கிருஷ்ணாரெட்டி (85) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலுள்ள யூனியன் பாங்க் கிளையின் லாக்கர் அறைக்கு சென்றிருந்தார். இதையடுத்து அவர் லாக்கர் அறையில் இருந்ததை பார்க்காமல் ஊழியர், அதைப்பூட்டி விட்டு வங்கி ஷட்டரையும் கீழே இறக்கி விட்டார். இதன் காரணமாக அவர் அந்த அறைக்குள்ளே இரவு முழுதும் சிக்கித் தவித்தார். இந்நிலையில் வங்கிக்கு சென்ற கிருஷ்ணாரெட்டி வீடு திரும்பாததைக் கண்ட அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்போது வங்கியின் சிசிடிவி கேமரா பதிவுகளை நேற்று ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், கிருஷ்ணாரெட்டி லாக்கர் அறைக்குள் இருப்பதை கண்டறிந்தனர். அதனை தொடர்ந்து லாக்கர் அறையைத் திறந்து அவர் மீட்கப்பட்டார். இதில் கிருஷ்ணாரெட்டி நீரிழிவு நோயாளி என்பதால் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவ்வாறு திறந்து கிடந்த லாக்கர் அறையை மூடுவதற்கு முன்பு அங்கு யாரேனும் இருக்கிறார்களா என்று கூட கவனிக்காமல் ஊழியரின் அலட்சியப்போக்கு கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்துவிட்டது.