தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே குன்னில்வீடு பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கயிறு தயாரிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் கந்தசாமி சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் பயனளிக்கவில்லை. இதனால் மனமுடைந்த கந்தசாமி வீட்டிலிருந்த பினாயிலை எடுத்து குடித்துவிட்டு மயங்கி நிலையில் கிடந்துள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கந்தசாமியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பிறகு கந்தசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.