சப்-கலெக்டர் அலுவலகத்தில் வைத்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு பெண் தனது 2 குழந்தைகளுடன் மொபட்டில் வந்துள்ளார். இந்நிலையில் திடீரென அந்த பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக ஒரு குடத்தில் இருந்த தண்ணீரை எடுத்து பெண் மீது ஊற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர் பொள்ளாச்சி தன்னாசியப்பன் வீதியில் வசிக்கும் சதீஷ் என்பவரது மனைவி சத்யா என்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்யாவின் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் காணாமல் போனதால் இதுகுறித்து அவர் அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கேட்டுள்ளார். அப்போது சத்யாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவர்கள் சத்யாவையும், அவரது 8 வயது மகனையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சத்யா தீக்குளிக்க முயன்றது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து இதுபோன்று இனி செய்யக் கூடாது என அறிவுரை வழங்கி சப்-கலெக்டர் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.