இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிடம் மீண்டும் கடன் உதவி கேட்டுள்ளது.
இலங்கையில் கொரோனாவுக்கு பின்னர் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக சீனாவிடம் கடன் பெற்றது. ஆனால் அதனை திருப்பி கொடுக்க முடியாமல் திணறியது. இதனால் சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்தது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கூட வாங்க முடியாமல் இலங்கை திணறி வருகிறது. இதனால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு கடுமையாக இருப்பதோடு, தினமும் மின்வெட்டும் பல மணி நேரம் நீடிக்கிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,580 கோடி) இந்தியாவிடம் கடன் கேட்டது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு நிதியமைச்சர் பாசில் ராஜபக்சே இந்தியா வந்தார். அப்போது அவர் டெல்லியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் ஒரு பில்லியன் டாலர் இலங்கைக்கு கடன் வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்காக இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டாலர் கடன் உதவியை இலங்கை கேட்டுள்ளது.