தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த 10 மாத காலங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் போக்சோ சட்டத்தில் கைது போன்றவைதான் தினசரி நாளிதழ்களில் செய்திகளாக வருகின்றனர். இது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷயம். விருதுநகர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து ராமநாதபுரத்திலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி உள்ளது. அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கடற்கரைக்கு சென்று வந்ததை நோட்டமிட்ட 5 நபர்கள் கொண்ட ஒரு ரவுடி கும்பல் அவருடைய ஆண் நண்பரை அடித்து உதைத்து அவரது கண்ணெதிரேயே அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த சம்பவம் மிகவும் வேதனைக்குரியது. இதே மார்ச் மாதத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவிக்கு திமுக கிளைச் செயலாளர் ஒருவரால் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அவலத்தின் ஈரம் காயும் முன் நேற்று சென்னை அரக்கோணம் பகுதியில் கஞ்சா வியாபாரிகள் போலீசார் மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
அதோடு சிலர் கை துப்பாக்கியோடு கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. தமிழகம் நோக்கி செல்கிறது என்றே தெரியவில்லை.? சென்னை அரக்கோணம் பகுதியில் மட்டும் சுமார் 100 பேர் சுதந்திரமாக விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த அவலம் தொடரும் பட்சத்தில் சென்னை தமிழகத்தின் மோசமான மாவட்டமாக மாறிவிடும் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை. அதிமுக ஆட்சியில் அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத பட்சத்தில் பொதுமக்களுக்கு எங்கிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.