மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்து இருந்தது. அந்த வகையில் முதல் நாள் போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் ஐஎன்டியுசி, சிஐடியு, ஏஐடியுசி, தொமுச, எச்எம்எஸ் உட்பட 10 தொழிற்சங்கங்கள் இந்த பொது வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. காப்பீடு, எண்ணெய் நிறுவனங்கள், வங்கி ஊழியர்கள் ஆகிய பொதுத்துறை ஊழியர்கள் சம்மேளனங்களும் கலந்துகொண்டுள்ளனர். இதனால் நேற்று பொதுப்போக்குவரத்து அதிகமாக பாதிக்கப்பட்டது. அதாவது நேற்று அரசு பேருந்துகள் ஓடாததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனிடையில் வேலைக்கு போகும் ஊழியர்கள், பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளும் பாதிக்கப்பட்டனர். இதனால் நேற்று ஆட்டோக்களில் அதிகளவில் மக்கள் பயணம் மேற்கொண்டனர். இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்தி நேற்று ஆட்டோக்களில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது. இந்நிலையில் இன்று(மார்ச்.29) ஆட்டோக்களில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது எனவும் இதனை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.