நேற்று சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேன் மோதி 2ஆம் வகுப்பு படிக்கும் தீக்சித் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பள்ளி வளாகத்தில் தீக்சித் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக ரிவர்ஸில் வந்த வேன் திடீரென மோதியதால் மாணவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியமாக வேனை இயக்கிய ஓட்டுனர் பூங்காவனத்தையும், மாணவர்களை வேனில் இருந்து இறக்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தி என்பவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதேபோல் பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி முதல்வர் தனலட்சுமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி வேன் மோதி பலியான மாணவனின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.