காஞ்சிபுரம் அருகில் அங்கம்பாக்கத்தில் 1100 ஆண்டு காலம் பழமை வாய்ந்த தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் அருகில் அங்கம்பாக்கத்தில் 1100 ஆண்டு காலம் பழமைவாய்ந்த தவ்வை சிலை கண்டுபிடிக்கப்பட்டது. தேவரியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் அஜய்க்குமார் மற்றும் ஆய்வு மைய தலைவர் இதுகுறித்து பேசியதாவது, பல்லவர் காலத்திற்கு முன்பு இருந்தே தாய் தெய்வ வழிபாட்டில் தவ்வை வழிபாடு தொன்றுதொட்டு மரபில் இருந்து வந்து இருக்கிறது .
இந்த 7 கன்னியர்களுள் தவ்வை குழந்தை பேறு அளிக்கும் தெய்வமாக வழிபட்டு வந்தனர். இந்த தவ்வையை சோழர் காலத்தில் கோவிலில் தென்மேற்கு பகுதியில் வைத்து வழிப்பட்டு வந்தனர். அதேபோல பல்லவர் காலத்திலும் தவ்வை வழிபாடு உச்ச நிலையில் இருந்தது. மேலும் நந்திவர்ம பல்லவனுக்கு குலதெய்வமாக இருந்து வந்துள்ளது. பூமாதேவிக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். ஒருவர் மூத்த தேவி இரண்டாவது மகள் சிறிய தேவி. அதாவது சிறிய தேவியை ஸ்ரீதேவி என்றும், மூத்த தேவியை மூதேவி என்றனர்.
இந்த மூத்த தேவியான தவ்வைக்கு பல பெயர்கள் இருந்தன. அவை காக்கைக் கொடியாள், ஏக வேணி, ஜேஷ்டாதேவி, சேட்டா தேவி, சேட்டை, மாமுகடி, பழையோள் என்று அழைத்தனர். ஜேஷ்டா என்பது சமஸ்கிருதத்தில் முதல் என்றும், சேட் என்பது தமிழில் பெரிய என்றும் பொருள்படும். சங்க இலக்கியங்களில் அதிகமாக பாடப்பட்ட தெய்வம் கொற்றவைக்கு அடுத்த மூதேவி என்ற தவ்வை தெய்வம் தான்.
மேலும் தவ்வையை பற்றி அவ்வையார், கம்பர், திருவள்ளுவர் போன்ற புலவர்கள் கூறியுள்ளார்கள். தவ்வையின் மகன்களை மாந்தன், குளிகன் என்று அழைத்தனர். மாந்தனின் வடிவம் எருமை தலை போன்று காணப்படுவதால் சங்க இலக்கியங்களில் மருதத் திணையில் உள்ள உழுதல் தொழிலுக்கு எருமைகள் பயன்படுத்தபடுவது குறிப்பிடப்பட்டிருக்கிறது.
மேலும் தவ்வையின் மகள் மாந்தி உருவம் இடப்பக்கம் செதுக்கப்பட்டன. காகத்தை கொடியாக கொண்டும், கழுதையை வாகனமாக கொண்டும், தூய்மையின் அடையாளமாக துடைப்பத்தை கொண்டும் தவ்வை சிலை இருக்கின்றது. இங்கே கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிலையானது பிற்கால பல்லவர் கால சிலை என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சிலை பராமரிப்பு இல்லாமல் வெயிலிலும் மழையிலும் மண்ணுக்குள் மறைந்து கிடந்தாலும் சிற்பத்தின் வேலைப்பாடுகள் சிதைந்து காணப்படுகின்றன. மேலும் நெற்கதிர்க்கு அடையாளமாக திருமகள், லட்சுமி என்று தவ்வை அழைக்கப்பட்டாள். இந்த சிலை பெரும்பாலும் நீர்நிலை சார்ந்த இடங்களிலும், வயல் சார்ந்த இடங்களிலும் காணப்படும்.
இந்த தெய்வத்தின் வழிபாடு என்பது “ஆதி தமிழனின் உரத்திற்கு பின் செழிப்பு” என்ற அரிய தத்துவ வெளிப்பாடு. இந்த தெய்வத்திடம் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் என்றும், சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும் என்றும் வழிபட்டு வந்தார்கள். இந்த தெய்வத்தின் வடிவம் வளமை தெய்வம் என்று சொல்வதற்கு இணங்க பருத்த வயிறு கொண்டதாகவும், செழித்த மார்புகளோடும் இருக்கின்றது.
இப்போது இந்த தெய்வத்தை அழுக்கு தேவியாக கருதுகிறார்கள். ஆனால் அழுக்கு என்பது வயலுக்கு தேவைப்படக்கூடிய உரம் மற்றும் கால்நடைகள் தாவரங்களின் கழிவை குறிக்கும். புராணத்தில் திருமால் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கும் போதே திருமகளுக்கு முன்னதாகவே மூத்த தேவி தோன்றிவிட்டாள் என்று கூறப்படுகிறது. தொல்பொருள் துறையினர் பழமை வாய்ந்த மூத்த தேவியின் சிற்பத்தை மீட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.