தங்க சங்கிலியை திருட முயன்ற குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்பாள்புரத்தில் புவனேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வைர கற்கள் பதித்த 2 3/4 பவுன் சங்கிலியை நகை கடையில் கொடுத்து விட்டு புதிதாக நகை வாங்க முடிவு செய்தார். இதற்காக புவனேஸ்வரி தனது சகோதரியுடன் நகைக்கடைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இந்நிலையில் தங்க சங்கிலியை வாகனத்தின் சீட்டுக்கு அடியில் இருக்கும் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு புவனேஸ்வரி ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது ஒருவர் பெட்டியை திறந்து தங்க சங்கிலியை எடுப்பதை பார்த்து புவனேஸ்வரி சத்தம் போட்டுள்ளார்.
அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அந்த நபரை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் லட்சுமி நகரில் வசிக்கும் சாரதி என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.