பெற்றோரை பராமரிக்காத மகனுக்கு பெற்றோர் வழங்கிய நிலப்பத்திரத்தை ரத்து செய்யுமாறு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டாச்சிபுரம் பகுதியில் ராஜமாணிக்கம் சாந்தகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தம்பதியினர் இருவரும் தங்களது மகளான தேவசேனா என்பவருடன் கடந்த 23-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து ராஜமாணிக்கம் கூறியதாவது, எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் நல்லாபாளையத்தில் உள்ளது. அந்த இடத்தை எனது மகன் பிரபாகரனுக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு கிரையம் செய்து கொடுத்து விட்டேன். ஆனால் கடந்த ஒரு வருடமாக பிரபாகரன் எங்களை சரியாக பராமரிக்கவில்லை. எனவே நாங்கள் பிரபாகரனுக்கு வழங்கிய கிரைய பத்திரத்தை ரத்து செய்து மீண்டும் எங்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜமாணிக்கம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கடந்த 24-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மோகன் உத்தரவின் படி வருவாய்த்துறை அலுவலர் ராஜமாணிக்கத்தின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியதில் பிரபாகரன் பெற்றோரை பராமரிக்கவில்லை என்பது உறுதியானது. இதனையடுத்து விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் பிரபாகரனுக்கு பெற்றோர் வழங்கிய நிலத்திற்கான நிலப்பத்திரத்தை பெற்றோர், முதியோர் பராமரிப்பு, நல்வாழ்வு சட்டத்தின் கீழ் ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஆணை ராஜமாணிக்கம் வழங்கப்பட்டது உடனடியாக நடவடிக்கை எடுத்தமாவட்ட ஆட்சியாளரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.