வாணியம்பாடி அருகே காதலித்து கர்ப்பமாக்கியவருக்கு கல்யாணம் செய்து வைக்கக் கோரி காவல் நிலையம் முன்பாக இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் சின்னமூக்கனூர் பகுதியில் வசித்து வந்தவர் ஜோதி(25). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் தனது தோழியின் மூலம் வாணியம்பாடி அடுத்த விஜிலாபுரத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் ஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் கோயமுத்தூர் பகுதியில் ஒரு வருடம் வேலை பார்த்து வந்துள்ளனர்.
அப்போது முருகன் ஜோதியிடம் காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறியதால் இருவரும் உல்லாசமாக இருந்தனர். இதனால் ஜோதி கர்ப்பமானார். இதை அடுத்து ஜோதியை திருமணம் செய்து கொள்வதாக கூறி முருகன் கடந்த 4ஆம் தேதி வாணியம்பாடிக்கு ஜோதியை அழைத்து சென்று அங்கே தனியாக தங்க வைத்தார்.
அதன்பின் ஜோதி முருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தொலைபேசியை எடுக்காமல் தலைமறைவானார். அதன்பின் ஜோதி நேற்று முருகனின் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோரிடம் நானும், முருகனும் காதலிப்பதாகவும், தற்போது நான் கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த முருகனின் பெற்றோர், உறவினர்கள் ஜோதியை கத்தியால் தாக்கினர். இதனால் ஜோதி கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோதி வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து முருகனுக்கும், எனக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கோரி காவல் நிலையம் முன்பாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி விசாரணை மேற்கொண்டு முருகனை அழைத்து பேசியுள்ளார். அதில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் என்று எழுதி கொடுத்தனர்.