உத்திரப்பிரதேச மாநில கன்டெய்னர் லாரியில் இருந்த செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் விநாயகபுரம் பகுதியில் தானிய வியாபாரிகள் சங்க வணிக வளாக எடை மேடை அமைந்துள்ளது. இந்த எடை மேடையின் பின்புறம் நேற்று முன்தினம் அதிகாலை உத்தரப்பிரதேச மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. இந்த லாரி ஓட்டுநர், கிளீனர் யாரும் இல்லாமல் நின்றதை பார்த்து சந்தேகமடைந்த நெல் மண்டி வியாபாரி லாரி மேலே ஏறிப் பார்த்தார். அதில் செம்மரக்கட்டைகள் மறைத்து வைக்கபட்டிருந்தது.
இதை பார்த்த தானிய வியாபாரிகள் சங்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் பேரில் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அதில் 64 பாலிஸ் செய்யப்பட்ட 45 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகள் இருந்தது. இது மொத்தமாக 3 டன் இருக்கும். உடனே அவர் வனசரக துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
இத்தகவலின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட வனசரக அலுவலர் ராமதாஸ், வனக்காப்பாளர் ஆதித்தன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினரிடம் இருந்த லாரியையும், செம்மர கட்டைகளையும் பறிமுதல் செய்து வன இலாகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பின்னர் இந்த செம்மரக்கட்டைகளை ஆய்வு செய்து பார்த்தால் தான் இதன் மதிப்பு என்ன என்று குறிப்பிட முடியும் என்று தெரிவித்தனர்.