மாணவனை திருமணம் செய்த குற்றத்திற்காக ஆசிரியரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூரில் இருக்கும் தனியார் பள்ளியில் சர்மிளா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த ஆசிரியரும் அதே பள்ளியில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவனும் கடந்த 5-ஆம் தேதி திடீரென காணாமல் போய்விட்டனர். இது குறித்து மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சர்மிளா மாணவனை அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து தோழியின் வீட்டில் தங்கியிருந்த சர்மிளா மற்றும் மாணவனை காவல்துறையினர் சர்மிளாவின் செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்தனர்.
அதன் பின் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது தஞ்சை பெரிய கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டு எடமலைப்பட்டி புதூரில் இருக்கும் தோழியின் வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சர்மிளாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.