திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “திருச்சியில் கழக தொண்டர்கள் காட்டிய அன்பு என்னை திக்குமுக்காட செய்து விட்டது. இதுவரை 300க்கும் மேற்பட்ட வீடுகளில் உணவு அருந்தி விட்டேன். அவர்களின் அன்பிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். திமுகவினர் ஆட்சி நடக்க தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து பல்வேறு அராஜகங்களை செய்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் துபாய் சென்று முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வந்தனர்.
ஆனால் தற்போது திடீரென முதல்வர் இப்போதுதான் புதிதாக போய் முதலீடுகளை இருப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப் போகிறோம் என கூறிக்கொண்டு துபாய் சென்றுள்ளார். இது நம்பும்படியாக இல்லை.இதனை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். முதல்வரின் துபாய் பயணம் அவருடைய தனிப்பட்ட பயணமா.? இல்லை முதலீடுகளை ஈர்க்க சென்றாரா என்பது தொடர்பாக பொறுத்திருந்துதான் நாம் பார்க்க வேண்டும். நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனக்குத்தான் வாய் இருக்கிறது என்பதுபோல் வாய்க்கு வந்தபடி பேசி வருகிறார். கல்விக்கடன் ரத்து விவசாய கடன் ரத்து போன்று திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் தற்போது காற்றோடு காற்றாக கலந்து விட்டது. மக்களை ஏமாற்றி இவ்வாறு ஆட்சியை பிடித்த திமுக அரசை ஒருபோதும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள். தாலிக்கு தங்கம் போன்ற மகத்தான திட்டத்திற்கு மூடுவிழா நடத்தி விட்டனர். இதெல்லாம் ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் செயல். இவ்வாறு அவர் கூறினார்.