பெங்களூரில் டிரான்ஸ்பார்ம் வெடித்து சிதறியதில் தீக்காயமடைந்த தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூர் ஞானபாரதி அருகில் மங்கனஹள்ளி பகுதியில் காவலாளியான 55 வயதுடைய சிவராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகள் 19 வயதான சைதன்யா பி.யூ.சி படித்துள்ளார். இந்நிலையில் சைதன்யாவுக்கும், இன்னொரு நபர் ஒருவருக்கும் கல்யாணம் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளது.
சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் ஏப்ரல் முதல்வாரத்தில் நடைபெற இருப்பதால் அதற்கான ஏற்பாடுகளை சிவராஜ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மங்கனஹள்ளியில் இருக்கும் கல்யாண மண்டபத்தை முன் பதிவு செய்வதற்காக சிவராஜ் தனது மகள் சைதன்யாவுடன் பைக்கில் நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
இதையடுத்து கல்யாண மண்டபம் முன்பதிவு செய்துவிட்டு தந்தையும், மகளும் மங்கனஹள்ளி மெயின் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ரோட்டின் அருகே இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி தீப்பிடித்தன. அந்த தீ சிவராஜ், சைதன்யா மற்றும் பைக்கில் பற்றி எரிந்தது.
இதில் தீ காயமடைந்த 2 பேரையும் விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவராஜீம் நேற்று அதிகாலை சைதன்யாவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் கணவர் மகளின் உடலை பார்த்து சிவராஜின் மனைவி கதறி அழுது துடிதுடித்துப் போனது பார்க்கவே பரிதாபமாக உள்ளது.
இதுகுறித்து ஞானபாரதி காவல்துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில் டிரான்ஸ்பார்மர் திடீரென எதிர்பாராதவிதமாக கோளாறு ஏற்பட்டு வெடித்து சிதறி தீப்பிடித்து இருக்கும் என்று காவல்துறையினர் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
அதேசமயம் மின்வாரிய அலட்சியம்தான் டிரான்ஸ்பார்ம் வெடித்ததற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று கோரி அப்பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமாதானபடுத்தினர். இதை ஏற்றுக்கொண்டு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மின்வாரிய அதிகாரிகள் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.