முன்னாள் நீதிபதியின் பாதுகாவலர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதியான சி. டி செல்வம் என்பவர் தற்போது போலீஸ் கமிஷன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சக்திவேல் என்பவர் தனிப்பட்ட பாதுகாவலராக இருக்கிறார். இந்நிலையில் நீதிபதி செல்வம் சென்னை அசோக் நகர் போலீஸ் பயிற்சி கல்லூரியில் காரில் கொண்டிருந்த போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று நபர்கள் வாகனங்களுக்கு வழிவிடாமல் போதையில் ரகளை செய்துள்ளனர். இதனால் பாதுகாவலர் சக்திவேல் காரில் இருந்து கீழே இறங்கி ரகளையில் ஈடுபட்ட மூன்று பேரையும் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்திய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சக்திவேலின் தலையில் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் அங்கு போலீஸ் படையினர் குவிக்கப்பட்டு நீதிபதி செல்வம் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.