கோபால் நாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நகை கடன்களில் முறைகேடு நடந்துள்ளதாக கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகில் சுக்காங்கல்பட்டியில் கோபால நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இந்த கூட்டுறவு சங்கத்தில் மூர்த்தி நாயக்கன்பட்டி, சுக்காங்கல்பட்டி, வெள்ளையம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர்.
இந்நிலையில் கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் தனியார் அடகு கடையில் அதிகமான தொகைக்கு வைத்ததாக பொதுமக்களுக்கு கடந்த 22-ம் தேதி நோட்டீஸ் வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகளிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் முன்னும் பின்னுமாக முரணாக பேசி பதிலளித்தார்கள். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகவலை அறிந்த ஓடைப்பட்டி காவல்துறையினர், உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜுனன், கூட்டுறவு சங்க உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறியது, கூட்டுறவு சங்கத்தில் கடந்த சில நாட்களாகவே அடகு நகைகளை திருப்ப போகும் போது அலைகழிக்கின்றனர் மற்றும் நகை கடன் தள்ளுபடி குறித்து விவரம் கேட்டால் அதற்கு சரியான பதில் தரவில்லை.
மேலும் வைப்பு தொகை செலுத்திவர்களின் பெயரில் தொகை இல்லாமல் பூஜ்ஜியம் என்று காட்டுகிறது. எனவே கூட்டுறவு சங்கத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பதாகவும் எங்களது அடகு நகைகள் குறித்த விவரம் தெரிய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து அதிகாரிகள், நகை கடன் பற்றிய விவரங்கள் குறித்து கூட்டுறவு கடன் சங்கத்தை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அதன்பின் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் உடனே புகார் தெரிவிக்கலாம். இப்புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கபடும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.