புதுச்சேரி மாவட்டம் காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின் 199 ஆம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த கந்தூரி விழாவானது வெகுவிமர்சையாக ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் இந்த விழா நடைபெறாத நிலையில் 199 ஆவது ஆண்டு கந்தூரி விழா கடந்த 13ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சந்தனக்கூடு வைபவம் நடைபெற்றது. இதையடுத்து நேற்றிரவு 10 மணிக்கு தர்காவில் இருந்து புறப்பட்ட சந்தனக்கூடு மின் விளக்குகளால் அலங்கரிக்கபட்ட பல்லாக்கு, கப்பல் போன்ற 20-க்கும் மேற்பட்ட ஊர்திகள் புறப்பட்டு நகரின் குறிப்பிட்ட வீதிகள் வழியாக வலம் வந்து இன்று காலை 4 மணிக்கு தர்கா வந்தடைந்தது.
மேலும் இந்த விழாவில் காரைக்கால் மாவட்டம் மட்டுமில்லாமல் இன்னும் சில மாவட்டங்களிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திருந்தது. மேலும் புதுச்சேரியில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள்.