உக்ரைன் அகதிகளுக்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ரஷ்யாவை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் தனது நோபல் பரிசை ஏலம் விடுவதாக அறிவித்திருக்கிறார்.
ரஷ்யாவைச் சேர்ந்தவர் டிமிட்ரி முரடேவ்(60). இவர் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார். நோவாயா காஸிடா என்ற பத்திரிகையின் ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. நோபல் பரிசு தொகையினை அவர் மாஸ்கோவில் முதுகெலும்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவ செலவிற்காக வழங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது உக்ரைன் அகதிகளுக்க்காக உணவு மற்றும் படுகாயமடைந்தவர்களின் மருத்துவ செலவுக்காக நிதி திரட்டி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தன்னுடைய நோபல் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்திருக்கிறார். உக்ரைனில் இருந்து இதுவரை 30 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று உள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு லட்சம் மக்கள் உக்ரைனில் இருந்து வெளியேறி வருவதாகவும் தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.