தமிழகத்தில் மார்ச் 31-ஆம் தேதிக்குள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திருப்பித் தரப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் மதிப்பிலான நகை கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்து இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நகை கடன் தள்ளுபடி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மாவட்டத்தில் 16 கூட்டுறவு வங்கிகளில் பொது நகை கடன் தள்ளுபடிக்கு 13,595 பயனாளிகள் தகுதி பெற்றுள்ளனர். மேலும் அவர்களுக்கு கடன் தொகை ரூபாய் 66.75 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு தள்ளுபடி சான்றிதழ்களும் அடமானமாக வைக்கப்பட்ட நகல்களும் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் நேற்று சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களுக்கு நகைகளை திருப்பித் தரும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு 175 பயனாளிகளுக்கு நகைகளை வழங்கியுள்ளனர். மேலும் நிகழ்ச்சியின் முடிவில் பேசிய அமைச்சர் பெரியசாமி செய்தியாளர்களிடம் மக்களின் குறைகள் அனைத்தையும் தீர்க்க திமுக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி இதுபோன்ற சலுகைகளை இதுவரை வேறு எந்த ஆட்சியாளர்களும் கொடுத்தது இல்லை என்பது அனைவருக்கும் தெரியும் என கூறியுள்ளார்.