2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன.
அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று (மார்ச் 21) முதல் 3 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கியது. இந்நிலையில் பெண்கள் உயர்கல்வி உறுதி திட்டம் (ரூ.1000 உதவித்தொகை) மூலம் ஆண்டுக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருமண உதவித் திட்டத்தின் (தாலிக்கு தங்கம்) மூலம் 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்து வந்தனர். பெண்களுக்கு கல்விதான் நிரந்தர சொத்து என்பதால் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இந்த உயர்கல்வி உறுதி திட்டத்தை கட்சி வேறுபாடின்றி அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.