இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவித்து பிரபலமடைந்த 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை, உடல்நலக்குறைவால் காலமானார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் இந்திய அணிக்கு பெரும் ஆதரவை அளித்தனர். அப்போது எட்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியைக் காண 87 வயதான சாருலதா படேல் என்ற பெண் ரசிகை அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
அந்தப் போட்டிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரோஹித் சர்மா ஆகியோர் அந்தப் பாட்டியை சந்தித்து அவரிடம் ஆசியும் பெற்றனர். மேலும், சாருலதா பாட்டி அடுத்தடுத்த போட்டிகளைக் காண்பதற்காக அவருக்கு இலவசமாக டிக்கெட்டுகளையும் பிசிசிஐ வழங்கியது. இந்திய அணி மீது சாருலதா வைத்திருக்கும் அன்பையும் நம்பிக்கையையும் பார்ப்பது தனக்கு உற்சாகமளிப்பதாகக் கோலி தெரிவித்திருந்தார்
இதனிடையே சாருலதா படேல், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13ஆம் தேதி காலமானதாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வௌயிடப்பட்டுள்ள பதிவில், சாருலதா பாட்டி எங்களின் உலகமாக இருந்தார். அவர் மிகச் சிறந்த நபர். கடந்தாண்டை அவருக்கு சிறப்பானதாக அமையச் செய்த அனைவருக்கும் நன்றி. மேலும் பாட்டியை நேரில் சந்தித்து அவரது வாழ்வின் சிறந்த நாளை அளித்த விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு பெரிய நன்றிகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து பிசிசிஐயின் ட்விட்டர் பக்கத்திலும் சாருலதா படேலின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருந்தனர். அதில் இந்திய அணியின் சூப்பர் ரசிகையான சாருலதா படேல் எப்போதும் எங்கள் மனதில் இருப்பார். விளையாட்டின் மீதான அவரது ஆர்வம் எங்களுக்கு எப்போதும் ஊக்கமாக இருக்கும். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டும் என்று பதிவிடப்பட்டிருந்தது. தற்போது பல்வேறு ரசிகர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.