தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு தொழில்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பெரும்பாலானோர் தங்களின் வேலைகளை இழந்துள்ளனர். இதற்கிடையில் அரசாலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த முடியாத சூழல் உருவாகியது. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும் பல பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு ஏராளமானோருக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் வரும் 20ஆம் தேதி அன்று வண்டலூரில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
இந்த முகாமை தமிழ்நாடு முதல்வர் தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் கிரசன்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற இருக்கிறது. இதில் 400-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்துடன் இந்த நிறுவனங்களால் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கிறது. இம்முகாமில் வேலையில்லா இளைஞர்கள் பங்கேற்று வேலைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் வேலையில்லா இளைஞர்களுக்கு தமிழக திறன் மேம்பாட்டுக் கழகத்தால் இலவச திறன் பயிற்சிக்குப் பதிவு செய்யப்பட்டு திறன் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் அயல்நாட்டில் பணிபுரிய விரும்புவர்களுக்கும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக பதிவுசெய்து தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்பவர்கள் ஏதேனும் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டால் அவர்களுக்கு உடனே பணி நியமன ஆணைகளை வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.