ஆக்கிரமிப்பை அகற்றிய போது விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள துளாரங்குறிச்சி கிராமத்தில் விவசாயியான ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வயலுக்கு அருகில் இருக்கும் வண்டிபாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. இதனால் அந்த பாதை வழியாக அறுவடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் வருவாய்த்துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்துள்ளனர். அப்போது திடீரென்று ஜெயவேல் தனது உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனை அடுத்து அதிகாரிகள் வண்டிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.