இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதால் அதிபரை எதிர்த்து ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனால் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, இலங்கை அரசு நிலைமையை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது மட்டுமல்லாமல் தினமும் பல மணி நேரங்களாக மின்வெட்டு ஏற்பட்டு, மக்களை திணறடிக்கிறது.
ஒரு கிலோ அரிசியின் விலை இலங்கை ரூபாயில் 448-ஆக இருக்கிறது. பால் ஒரு லிட்டர் ரூ.263(இலங்கை மதிப்பு). ஒரு முட்டையின் விலை ரூ.28-ஆக அதிகரித்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஆப்பிளின் விலை ரூ.150. பேரீச்சம்பழம் ஒரு கிலோ 900 ரூபாய். சர்க்கரை, பால், கோதுமை, மற்றும் பருப்பு என்று அனைத்தையும் விலை ஏற்றி வைத்திருக்கிறார்கள்.
ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.283, ஒரு லிட்டர் டீசல் ரூ.176. இதனால், வாகனங்களை மக்கள் ஓரங்கட்டிவிட்டனர். பேருந்து கட்டணமும் உயரப்போகிறது என்று பேருந்து அதிபர்கள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதனால், கடும் கோபமடைந்த மக்கள் அதிபரை எதிர்த்து போராட்டத்தில் இறங்கினர். அதிபர் கோட்ட பாய ராஜபக்சே, பதவி விலக வேண்டும் என்று தலைநகர் கொழும்பில் போராட்டம் வெடித்திருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள், இலங்கை அரசிற்கு எதிராக போராட்ட நடத்தி வருகிறார்கள்.