வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று வரும் 23ஆம் தேதி வங்கதேசம் மற்றும் மியான்மரை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக பதிவாகும்.
சென்னையில் இன்று வானம் மேகமூட்டமாக காணப்படும். இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து வரும் 19ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மற்றும் அதன் பின் வடக்கு வடமேற்கு திசையில் அந்தமான் கடல் ஓரம் வழியே நகர்ந்து 20ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பின்னர் புயலாக வலுப்பெற்று 23ஆம் தேதி வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடலோரப் பகுதியில் நிலவும்.
இதன் காரணமாக தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்றும் தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் நாளையும் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். தெற்கு அந்தமான் கடல் பகுதி கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வரும் 19ம் தேதியும், தெற்கு அந்தமான் பகுதி மற்றும் வடக்கு அந்தமான் பகுதிகளில் வரும் 20ஆம் தேதியும் மணிக்கு 75 கிலோமீட்டர் வேகம் வரை சூறாவளி காற்று வீசக்கூடும் அதனால் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.