உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை ஆக்கிரமித்து வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் அதிக தீவிரம் காட்டி வருகிறது. இப்போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்யபடைகள் முன்னேறி வருகிறது.
அத்துடன் பொதுமக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீதும் தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் தங்களது நாட்டில் ரஷ்யா இனப் படுகொலை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டிய உக்ரைன், போரை உடனே நிறுத்த உத்தரவிடக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது.
இவ்விவகாரம் குறித்து நெதர்லாந்தை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. தற்போது இவ்விசாரணையை அடுத்து உக்ரைன் மீது நடத்திவரும் ராணுவ நடவடிக்கைளை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.