Categories
தேசிய செய்திகள்

தமிழக அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு…. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை….!!!

தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மையில் அந்த மாநில அரசானது பழைய ஓய்வூதிய திட்டத்தை 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப் போவதாக அறிவிப்புகளை வெளியிட்டு நிலையில், தமிழகத்திலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சிறப்பு தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை நிர்வாக ரீதியாக அழைத்து கலந்துரையாடி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக மாவட்ட ஆட்சியர்கள் ரேஷன் கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ள கருத்தை நாங்கள் வரவேற்கிறோம். அதேவேளையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி போன்ற பொருள்களும் ஆலையிலிருந்து குடோனுக்கு வரும்போது மற்றும் குடோன்களில் இருந்து ரேஷன் கடைக்கு வரும் போதும் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்வது தான் சிறந்த முறையாகும். மேலும் இதற்கான உத்தரவை முதல்வர் பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏனெனில் இந்த 3 இடங்களிலும் ஆய்வு செய்து தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் சரியான முடிவாகும்.

அதைவிட்டு மேல்மட்டத்தில் இருந்து தொடங்கக்கூடிய தவறுகளை அனுமதித்துவிட்டு, கீழ்மட்டத்தில் உள்ள பணியாளர்களை மட்டும் ஆய்வு செய்வது என்பது ஏற்க முடியாத ஒன்று. மேலும் பேசிய அவர், இரு வகையாக அரசுப்பணியாளர்கள் உள்ளனர். அதில் ஒன்று நிரந்தர பணியாளர்கள் மற்றும் மற்றொன்று தொகுப்பூதியம் உள்ளிட்ட நிரந்தரம் அல்லாத பணியாளர்கள் ஆகும். இந்த பணியாளர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு ஓய்வூதியமானது பலருக்கு இல்லாத நிலை உள்ளது.

மேலும் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, படிகளும் வழங்கப்படுவதில்லை. இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் நிரந்தரமில்லாத பணியாளர்களின் ஊதியத்தை உயர்த்துவதும் மற்றும் 6 மாதத்துக்கு ஒரு முறை அகவிலைப்படி வழங்கும் போதெல்லாம், அவர்களுக்கும் ஏதாவது ஒரு தொகையை அகவிலைப்படியாக வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து பழைய ஓய்வூதியத் திட்டமானது 2003ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது. எனவே கடந்த 18 ஆண்டுகளாக பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், அண்மையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலத்தில் இந்த திட்டமானது 2023ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் இந்த பழைய  ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர வேண்டும். மேலும் போக்குவரத்து துறையில் உள்ள உதவியாளர்கள் பதவி உயர்வுக்கு மிகுந்த காலதாமதம் ஏற்படுவதாகவும் , இதனால் முறைகேடுகள் நடந்து வருகிறது.

எனவே இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் பணி நியமனம் ,பணி உயர்வு மற்றும் இடமாறுதல் போன்றவற்றில் சிறந்த நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்தை கொண்டு வந்தால், ஒரு வரலாற்று சிறப்பு மிகுந்த நிகழ்ச்சியாக மாறும் என்று தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வரை வருகிற மார்ச் 17ஆம் தேதி சந்தித்து, எங்களது கோரிக்கைகளை அளிக்க முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். குறிப்பாக வள்ளுவர் கோட்டத்தில் உள்ள மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முன்னணி பணியாளர்கள் அனைவரும் இணைந்து முடிவு செய்த பின், அதன் பிரதிநிதிகளாக முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை அளிக்கப்போவதாக தெரிவித்தார். எனவே எங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை அளிக்க தமிழக முதல்வர் வாய்ப்பளிக்க வேண்டும் என்று கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இப்பேட்டியில் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில தலைவர் கோ.ஜெயசந்திரராஜா ஆகியோர்  உடன் இருந்தனர்.

Categories

Tech |