விராலிமலையில் இருந்து கீரனூர் சென்ற அரசு பேருந்து அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதை கண்ட தாசில்தார் அறிவுரை வழங்கியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உட்பட 100 க்கும் அதிகமான பயணிகள் சென்றனர் .ஒரு பக்கம் சரிந்தவாறு சென்று கொண்டிருந்த இந்த பேருந்தை கண்ட விராலிமலை தாசில்தார் சரவணன் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அதிகமான பயணிகளை ஏற்றி செல்ல கூடாது என்றும் குறிப்பாக மாணவர்கள் படியில் நின்று பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
இதற்கு காரணம் விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் சாலையில் அதிக பேருந்து வசதி இல்லை. எனவே அதிக பேருந்துகள் இயங்குவதற்கு வழிவகை செய்யுமாறு பயணிகள் தாசில்தாரிடம் கேட்டனர். இதற்கு அவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையின் மேலாளரை தொடர்பு கொண்டு இந்தவழி பாதையில் அதிக பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.