ஆட்டோ மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை அருகே காஞ்சாம்புரம் சரல் பகுதியில் தாசைய்யன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகாததால் மாம்பழஞ்சி பகுதியில் இருக்கும் தம்பி மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தாசைய்யன் குளிப்பதற்காக விரிவிளை பகுதியில் இருக்கும் ஆற்றிற்கு சென்றுள்ளார். இவர் ஆற்றில் குளித்து விட்டு திரும்பி வரும் வழியில் அவ்வழியே வேகமாக வந்த ஆட்டோ ஒன்று தாசைய்யன் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் தாசைய்யனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதைப்பார்த்த சிலர் தாசைய்யனை மீட்டு சிகிச்சைக்காக துத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தாசைய்யன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு தாசைய்யன் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து நிதிரவிளை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.