தேர்வில் பிட் அடித்து மாட்டிக்கொண்டதற்காக பள்ளி மாணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கணியூரில் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சோழமாதேவியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்ற மாணவன் 11 ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளிகளில் ரிவிசன் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரிவிசன் தேர்வில் மாணவன் பிட் அடித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டுபிடித்த ஆசிரியர் மன்னித்து மீண்டும் தேர்வு எழுத அனுமதித்துள்ளார். அப்போது கலைச்செல்வன் இரண்டாவது முறையாக மீண்டும் பிட் அடித்துள்ளார்.
இதனால் ஆசிரியர் கலைச்செல்வன் தலைமை ஆசிரியரிடம் அனுப்பியுள்ளார். அப்போது தலைமை ஆசிரியர் மாணவரின் பெற்றோரை அழைத்து வர கூறியிருக்கிறார். இதனால் மனமுடைந்த மாணவன் பள்ளி முடிந்து அனைத்து மாணவர்கள் வெளியே பின் வகுப்பறையின் மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார். இதனை அடுத்து கீழே விழுந்த சத்தம் கேட்டு ஆசிரியர்கள் ஓடிவந்து பார்த்தபோது மாணவன் ரத்தவெள்ளத்தில் கிடந்தார். உடனே மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் கலைச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த அங்கு வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ்குமார் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி பழனிச்சாமி ஆகியோர் பள்ளிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். தொடர்ந்து கலைச்செல்வனுடன் தேர்வெழுதிய சக மாணவர்கள் அவரவர் பெற்றோருடன் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.