நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் கணிசமாக குறைந்திருக்கும் நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் கொரோனா 3-வது அலைப் பரவலால் ஜனவரி மாதத்தில் ஒரு சில வாரங்கள் மட்டும் அடைக்கப்பட்ட பள்ளிகள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்பட்டு நேரடி முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் சண்டிகர் மாநகரத்திலும் கொரோனா பரவலால் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மீண்டுமாக திறக்கப்பட்டு உள்ளது.
இதனிடையில் நடப்பு கல்வியாண்டிற்கான வகுப்புகள் இன்னும் ஒருசில மாதங்களில் முடிவுக்கு வர உள்ளதால் தேர்வுகளை நடத்தி முடிப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் சண்டிகர் நகரத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இம்முறை கொரோனா தொற்று நோய்களின் போது குழந்தைகளுக்கு ஏற்படும் கற்றல் இழப்பை ஈடுசெய்ய சண்டிகர் கல்வித்துறை சிறிய திட்டங்களை தொடங்க உள்ளது.
அதன்படி புதிய கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தை தொடங்குவதற்கு முன்பு குழந்தைகள் நன்றாக தயாராகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி பிரப்ஜோத் கவுர் கூறியபோது “கொரோனா தொற்று கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்களின் கல்வியில் பெரிய இடைவெளி உருவாக்கப்பட்டதால், இம்முறை குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும். அதாவது மாணவர்களை மதிப்பீடு செய்ய குறுகிய பிரிட்ஜ் படிப்புகள் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.