பிரம்மாண்டமாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தென்னகப்பண்பாட்டு மையத்தில் வைத்து மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பில் ஆக்டேவ் என்ற வடகிழக்கு மாநில கலைவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறுகிறது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி, போலீஸ் சூப்பிரண்ட் பிரியா, கூடுதல் கலெக்டர் கவுசிக், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தென்னகப்பண்பாட்டு மையம் இயக்குனர் தீபக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் அசாம், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்களது பாரம்பரிய கலையை நடனம் மூலம் பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
இந்த கலைவிழாவில் 2-வது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் வந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இதனையடுத்து அவர்கள் தங்களது செல்போனில் கலைநிகழ்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சென்றுள்ளனர். மேலும் இந்த கலை விழா நாளையுடன் முடிகிறது. அதன்பின் வருகின்ற 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை தேசிய நாட்டுப்பற்று மற்றும் பழங்குடியினர் நடனங்கள் உள்ளிட்ட கலை விழா நடைபெறுகிறது. மேலும் இந்த கலைஞர்களை நிகழ்ச்சி பார்க்க வந்த பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.