புளியங்குடி கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பேராசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி பகுதியில் வசித்து வருபவர் மாடத்தி. இவரது மகள் பிரியா வயது (18). இவர் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் புளியங்குடியில் செயல்பட்டு வரும் மனோ கல்லூரியில் பிகாம் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களில் முன்பு கல்லூரிக்கு சென்ற இந்து பிரியா செல்போன் கொண்டு வந்ததாக கூறி அவரை மன்னிப்பு கடிதம் எழுதி கேட்டு பேராசிரியர்கள் முத்துமணி மற்றும் வளர்மதி ஆகியோர் வற்புறுத்தினர்.
அதற்கு இந்து பிரியா நான் மொபைல் போன் கொண்டு வரவில்லை எனவும் என்னால் கடிதம் எழுத முடியாது என பதில் அளித்ததால் பேராசிரியர்கள் இருவரும் கடுமையாக திட்டி உள்ளனர். இதில் மனமுடைந்த இந்து பிரியா கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
புளியங்குடி காவல்துறையினர் , மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது கடிதத்தில் தனது இறப்பிற்கும் கல்லூரி பேராசிரியர்கள் காரணம் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார். பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கோரி மற்றும் தற்கொலை செய்து கொண்ட மாணவி குடும்பத்திற்கு நிவாரண தொகை வழங்க வலியுறுத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அதிகாரிகள் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய தொகை பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர்.
அதன் பிறகு இந்து பிரியா உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக புளியங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துமணி, வளர்மதி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முத்துமணியை தென்காசி சிறையிலும் வளர்மதியை நெல்லை கொக்கிரகுளம் சிறையிலும் காவல்துறையினர் அடைத்தனர்.