ராணுவ வீரர் முதல் மனைவியை கொன்று புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திருக்குறுங்குடி வடக்கு ரத வீதியில் மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அசாம் மாநிலத்தில் ராணுவ வீரராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பிரேமா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த 2020-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பிறகு பிரேமா தனது குழந்தையுடன் சென்னையில் வசித்து வந்துள்ளார்.
கடந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணை மாரியப்பன் 2-வதாக திருமணம் செய்துள்ளார். இதற்கிடையே பிரேமாவுடன் மாரியப்பன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 9-ஆம் தேதி சொந்த ஊரான திருக்குறுங்குடிக்கு மாரியப்பன் மற்றும் பிரேமா ஆகிய இருவரும் வந்தனர். இதனையடுத்து பிரேமா திடீரென காணாமல் போய் விட்டார். அதன் பிறகு தனது மனைவியை கொன்று விட்டதாக மாரியப்பன் மதுபோதையில் சிலரிடம் உலறியுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது பிரேமா அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்த மாரியப்பன் சென்னையில் வசித்த பிரேமாவை சந்தித்து பேசியுள்ளார். அப்போது மகளின் படிப்பு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கு பணம் வேண்டும் என பிரேமா கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரேமாவை கொலை செய்ய திட்டமிட்ட மாரியப்பன் ஊருக்கு செல்லலாம் என நைசாக பேசி அவரை 9-ஆம் தேதி திருக்குறுங்குடிக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் மாரியப்பன் தான் அணிந்திருந்த துண்டால் பிரேமாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்து அவரது உடலை குளக்கரையில் குழிதோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நாங்குநேரி தாசில்தார் இசக்கி பாண்டியன் முன்னிலையில் காவல்துறையினர் பிரேமாவின் சடலத்தை தோண்டியெடுத்து அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.